பாரத கலைகள் போற்றுவோம்!
கருவிழி அசைவில்
கதைகள் சொல்லிடும்
பரதநாட்டியம்!
பாரதத்தின் பெருமைகளை
பறைசாற்றும் பழங்கலையாம்
கிராமிய நடனம்!
வசைபாடும் மாந்தர்களையும்
இசையால் வசப்படுத்தும்
வாய்ப்பாட்டு!
பாமர மக்களுக்கு
இசையுடன் செய்திகளை
சொல்லுது குழுபாட்டு!
பூப்பெய்தி பூத்திருக்கும்
பூவையரை மகிழச்செய்ய
கும்மிப்பாட்டு!
உழைக்கும் மக்கள்
சோர்வு நீங்க பாடிட
தெம்மாங்கு!
இயற்கையின் வனப்பழகை
நயமுடன் எடுத்தியம்பும்
ஓவியக்கலை!
மனித முயற்சியின் அடிப்படையாய்
உளியை உதாரணமாக்கும்
சிற்பக்கலை!
உள்ளத்து சோர்வை
நொடிப்பொழுதில் நீக்கும்
ஒயிலாட்டம்!
கானத்துடன் இசைகூட்டி
அசைன்ந்தாடச் செய்யும்
கரகாட்டம்!
விலங்கின் தோலால்
இசைதந்து பண்படுத்தி
ஆடும் ஆட்டம் தப்பாட்டம்!
கயவர்களின் கொட்டம் அடக்க
தோள் கொடுக்கும்
சிலம்பாட்டம்!
உலகை காக்கும் கடவுளையும்
மகிழ்வுறச் செய்யும்
காவடியாட்டம்!
தேசத்தின் பெருமைகளை எடுத்தியம்பும்
நுண்கலை வடிவங்களை
போற்றிப் பாதுகாப்போம்!
கவிஞர். நா.மல்லையன்
காரைக்குடி
No comments:
Post a Comment