Monday, January 25, 2010

தேர்த் திருவிழா

இது
ஒற்றைக்கரத்தின்
ஓங்கார வலிமையல்ல‌
ஊரே ஒன்று கூடி
ஓராயிரம் கரங்கள் ஒன்றிணைந்த‌
ஒற்றுமைத் திருவிழா.
ஒற்றுமையின் விளைவால்
பலநிகழ்வுகள் நடந்தேறுமென்பது
காலங்காட்டும் உண்மை
நிகழ்காலமே
வரலாற்றின் ஆதாரம் எனும்
வகைப்பாட்டின் அடிப்படையில்
இந்த பொன்னாளும் ஒருநாள்
வரலாறாகும்.

உடலில் குறையிருந்தாலும்
சிந்தையில் குறைவின்றி
செயலூக்கம் கொண்டிருக்கும்
எங்களவர் வார்த்தைகள்
அச்சேறும் அற்புத தினம்
இன்று.

இந்த
'கவிச்சிதறல்' திருவிழாவில்
தேர்செல்ல துணைநின்ற‌
அருமைக்கவிஞ‌ர்களுக்கும்
அன்பு உள்ளங்களுக்கும்
நெஞ்சுருக சமர்ப்பிக்கிறேன் ‍‍‍
ஓராயிரம் நன்றிகளை!

''நம்பிக்கை நாயகன்" கவிஞர் ஏகலைவன்
சேலம்

Saturday, January 23, 2010

கனவு வாழ்க்கை போதுமெனக்கு...

கண் பார்வையிழந்து
கடந்தன இருபது ஆண்டுகள்
என்றாலும்
என் பாட்டியை ஒருநாள் இரவு பார்த்தேன்
நாற்பதாண்டுகளுக்கு முன் மறைந்தவள்!
அதே முகம், அஹ்டே கனிவு
அதே சிவந்த நிறம்‍ மறுநாள்
எனக்குள் கொள்ளை மகிழ்ச்சி.

இன்னொரு நாள் கனவில்...
இருபதாண்டுகளுக்குமுன் மருத்துவமனையில்
என்னைச் சேர்த்தபொழுது கண்ணீர்விட்ட
என் தந்தை வந்தார்.
இறுக்கமான மனிதருக்குள் எத்தனை அன்பு

எனக்குள் இன்னும்
மிச்சமிருக்கிறது அவர் ஆளுமை
அவரின் தந்தைபேறு
என் தவம்
இன்னொரு நாள் கனவில் என் தாய்...
என்னோடு சேர்த்து
எட்டுக்குழந்தைகளை ஆளாக்கியவர்.
எத்தனை வதைகள்,எத்தனை வேதனைகள்
எல்லாமே நான் பார்க்க அனுபவித்தவை
அருகில் வைத்து தடவிக்கொடுத்தார் என்னை
கண்ணீர் விட்டேன் கனவிலும்...

எனக்குள் உயிர்ப்பாய்
இன்றும் இவர்கள்
கனவுக் காட்சிகள் போதும்
எனக்கு...

கவிஞர் கோவை ஞானி
புதிய கண்ணகி

அரசின்
கருணைத் தொகைக்காக‌
அலையாயலைந்தாள்
அந்த விதவை

கையெழுத்துக்கள்
பல வாங்கிக் கொடுத்தாள்

கடைசியில்
அந்தப் பணமும் வந்தது
பணத்தை கொடுத்த‌
அலுவலர் கை நீட்டினார்...

நீயும்
விதவை தானா?
அவன் முகத்தில்
விசிறியடித்தாள்
பணத்தை...

கவிஞர் கர்ணன்
மதுரை.
ஐம்பூதங்களும், ஐம்புலன்களும்

யாருமற்ற வெளிகளில்
காற்றுடன் உரையாடினேன்
வேறுபட்ட நட்புடன்
பொழுதும் கழிந்தது சிறு
சத்தம் வரவில்லை

புஞ்சை நிலப்பரப்பில்
கொஞ்சம் காலூன்றினேன்
அதிகாலை வானம்
பனியும் பொழிந்தது என்
காலுக்கு வலிக்கவில்லை...

கலங்கிய கண்மாயில்
கால்கள் நனைத்தேன்
பாசம் தின்னும் மீன்கள்
விரல்கள் கடித்தது அதன்
வண்ணம் தெரியவில்லை...

கண்ணாஇக் கூசும்
சூரிய வெப்பம்
மண்ணைப் பிளக்கும்
விதையின் நுட்பம்
ஏன்? எதற்கு? எப்படி? எதுவும்
எனக்கு புரியவில்லை...

கால்களற்று... பார்வையற்று...
கேட்கும், பேசும் திறனற்று... சுய உணர்வற்று...
போனபின்பும் அற்றுப் போகவில்லை
ஐபூதங்களுக்கும், ஐம்புலன்களுக்குமான
எங்களின் உறவு...

இங்கே
இதயங்கள் பேசிக் கொள்கின்றன.

கவிஞர் சு. அமுதசாந்தி
மதுரை
நவீன வேதாளங்கள்

செல்லப் பிராணிகளென‌
காதலுடன்
போற்றி வளர்க்கப்படுகின்றன‌
நவீன வேதாளங்கள்

இப்போதெல்லாம்
அவசியம் தேவைப்படுகின்றன‌
வேதாளங்கள்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு விஷயத்துக்காக‌

தலை வலித்தாலும்'
சுமை கனத்தாலும்
விதவிதமாய் சேட்டைகள் செய்தாலும்
விடாது சுமக்கின்றோம்
வேதாளங்களை
விக்ரமாதித்தன் போல...

வேதாளங்களின் தனிச்சிறப்பு
அவைகளுக்கு
எம்மரமும்
எம்மனிதரும்
சம்மதமே

கவிஞர் கோ.கண்ணன்
தர்மபுரி
திருநங்கை

ஆண்பாலிலும் அகப்படவில்லை
பெண்பாலிலும் பொருத்தமில்லை
அரவாணி என ஆகிவிட்டதால்
அரவணைக்கக் கூட யாருமில்லை

விலங்கு, பறவை
தாவரம் மனிதரென‌
அனைத்தும் அடையாளப்
பெயர் பெற்று அடைகின்றது கௌரவமே!
நாங்கள் மட்டும்
அடையாளம் காணாத‌
ஆச்சர்யக் குறியானோம்

அவலமே கண்டு கண்டு
அவனியிலே நொந்துவிட்டோம்
மனிதனையே மதிக்காத சமூகம்
மனிதனாகவே எண் ணாதவரையா மதிக்கும்?

குரோமோசோமின் குறும்பதுவால்
குழப்பமே வாழ்வானது
குனியக் குட்டும் சமுதாயத்தில்
மனமும் கூட தாழ்வானது

விதியை மீறிய விளையாட்டை
இயற்கை எப்படி ஈடுசெய்யும்?
விளக்க முடியா பதிலுக்கு
வினாக்குறியே விடையாகும்.

கவிஞர் இரா.சுமதி
தேனி
நம்பிக்கை

வீழ்வது பற்றி
ஒருபோதும்
எங்களுக்கு
கவலையில்லை
எழுவது உறுதி
என்பதால்...

கவிஞர் சே. ஜெயக்குமார்
சென்னை